பெரியவா சரணம்.
சென்ற வெள்ளிக்கிழமை அடையாறு லேட்டிஸ் ப்ரிட்ஜ் ரோட்டில் குடிகொண்டுள்ள ஸ்ரீ பெரிய பாளையத்தம்மனை தரிசித்து விட்டு, ஸ்ரீமான் திருச்சி ஐயப்பனின் கம்பராமாயண சொற்பொழிவும் கேட்டு ஆனந்தித்த பின்பாக Saraswathi Thyagarajan அம்மாவைக் கண்டு வர பெஸன்ட் நகர் சென்றிருந்தேன்.
என்னையுமறியாமல் செல்லவேண்டிய தெருவை விட்டு விட்டு அடுத்த தெருவினுள் நுழைந்துச் சென்றவன் அங்கிருந்த பூக்காரியிடம் புஷ்பம் வாங்கிச் செல்லலாமே என வண்டியை நிறுத்தினேன். அவர்களிடம் புஷ்பம் வாங்கிக் கொண்டே அம்மையாரின் கைகளில் ஸ்ரீபவானியின் படத்தினைத் தந்தேன். அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி. "அம்மா தான் எல்லாரையும் நல்லபடியா வாழவைக்கனும்" என்றபடியாக நான் கேட்டபடியாக புஷ்பப் பைகளை அடியேனிடம் தந்தார்கள்.
அந்த சமயம் அருகிலிருந்த எனது மகன், “அப்பா, பெரியவா படம் கொடுங்கோ, பாட்டிக்கு” என்று சற்று சத்தமாகச் சொல்லவே, அவனிடமே ஸ்ரீகுஞ்சித சங்கரன் படமொன்றைத் தந்து அம்மையாரிடம் கொடுக்கச் சொன்னேன். ஸ்ரீமஹாஸ்வாமியைக் கையில் வாங்கிய அம்மையாரின் முகத்தில் ஒரு கவலை ரேகை படர்வதைக் கண்டு விதிர்த்துப் போனேன். பொதுவாக பெரியவா படம் யார் கைகளுக்குச் சென்றாலும் அவர்களது முகத்திலே ஒரு ஆஸ்வாசம், ஒரு மகிழ்ச்சியே கண்டு வந்த அடியேனுக்கு இது மிகவும் வியப்பைத் தந்தது. அந்த அம்மையாரே தொடர்ந்து பேசினார்கள்.
“இது நடந்து ஒரு முப்பத்தொம்போது வருஷம் ஆகுது சார். நா வேலை செய்துவந்த வீட்டம்மாவும் ஐயாவும் பெரியவுகளைப் பாக்க போறப்ப என்னயும் அழைச்சுக்கிட்டுப் போனாங்க. நல்ல கூட்டம் அன்னிக்கு. எல்லாரும் ஒவ்வொருத்தரா இவுரு முன்னாடி போயி பிரசாதம் வாங்கிக்கினு போகையில, அவரு முன்ன நாம்போயி நின்னதுமே வெடுக்கினு மொகத்த திருப்பிக்கிட்டாக. எனக்கு பிரசாதமுந்தரல்ல. நானும் சும்மனா வந்துட்டேன்".... சொல்லிக் கொண்டே இருந்தவங்க கண்களிலிருந்த வலியை என்னால் உணரமுடிந்தது. எனக்குமட்டுமல்லாமல் எனது மகனுக்கும் ஸ்வாசமே நின்னுட்ட மாதிரி உணர்ந்தோம். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தபோது, எனது மகன், “நிச்சயமா இருக்காது; பெரியவா அப்படி பண்ணிருக்கவே மாட்டாரு” என்றான். “நீயி அவுர பாத்துருக்கியா, தம்பீ” என்று கேட்ட அம்மையாரிடம், தன் கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டே, “நாம்பாக்கறதுக்கு முன்னாடியே பெரியவா ஸித்தியாயிட்டா” என்று சொன்ன மகனை தேற்றுவதா? முப்பத்தொன்பது வருடத்திற்கு முன்னதாக தான் முன்னம் நின்றது முகத்தைத் திருப்பிண்டுட்டாரு இவுருன்னு சொல்ற அந்த அம்மையாரின் வலியை எப்படிப் போக்குவது என நினைப்பதா? ஒன்றுமே புரியாம தவிச்சுண்டுருந்தவனிடம், அந்த அம்மையார் தொடர்ந்து பேசினார்.
“அன்னீலேருந்து காஞ்சி பெரியவங்க யாரு வந்தாலும் அங்க போவமாட்டேன். இந்த ஏரியா பக்கமா எங்கயாவது அவுங்க யாராச்சும் வந்தாக்கூட கடை போடறதில்லே. பூக்கூடையை எடுத்துக்கிட்டு வேற எங்கனாச்சும் போயி வித்துப்பேன். நம்மள பாக்கவே பிடிக்காதவங்களுக்கு நாம விக்கற பூவக் கூட யாரும் வாங்கிக்கினு போவப்படாதுன்னு ஒரு நெனப்பு” என்ற படியாக என் கையில் அவர்கள் தந்துள்ள புஷ்பப்பைகளைப் பார்த்தபடியே பேசிக்கொண்டிருப்பதை என்னால் உணரவும் முடிந்தது. “சங்கரா…..! இதென்ன சோதனை? உங்களுக்காக வாங்கிய புஷ்பத்தினைத் இந்த அம்மையாரின் எண்ணத்திற்கென திருப்பித் தந்துச் செல்வதா? இல்லே பெரியவா… நீங்க இவாளுக்கு எப்படியாச்சும் காரண காரியத்தைப் புரியவைக்கனும் பெரியவான்னு மனசுக்குள்ளாக பிரார்த்தித்தபடியே மகனிடம் திரும்பியவன், அவன் கண்களில் நீரோடு என்னைப் பார்ப்பதைக் கண்டதும் எனக்கே அழுகை வந்துடுத்து. என்னப்பா இது..? என்றான். அவனிடம் பேசாமல் இரு என சைகை காட்டியபடியே அம்மையாரிடம் தொடர்ந்து பேசினேன்.
“அன்னிக்கி என்னம்மா நடந்தது? கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்” என்றேன். அவர்கள் கூற ஆரம்பித்ததுமே எங்கள் இருவருக்குமே ஒரு வித பரவசம் மனதுள்ளாக! “பெரியவா” என்றபடி என் மகன் என் இடுப்பில் ஒரு செல்லக் குத்து குத்தினானே, பார்க்கனும்.
அம்மையார் சொன்னது, இது தான்! “இது 2016 தானே… அப்ப, முப்பத்தொம்போது வருசத்துக்கு முன்னமாதான் பார்த்தேன். என் வூட்டுக்காரரு செத்து மூணு மாசம் இருக்கும். அப்பதான் போயிருந்தேன். டிரெயினுல கூட்டிப் போனாங்க நா வேலைபார்த்த வூட்டுக்காரவங்க” என்றதும் அடியேன் அந்த அம்மையாரிடம் காரணத்தை விளக்கினேன். “அம்மா, பொதுவாக விதவைகள் சன்னியாசிகளின் முன்பாகச் சென்று நேருக்கு நேர் பார்ப்பதைத் தவிர்ப்பாங்களே, தெரியாதா? அதுவும் கணவனை இழந்த மூன்றாம் மாதமே இப்படி நீங்கள் சென்றது சரியல்லவே! அதனை ஞானதிருஷ்டியில் அறிந்ததாலேயே, அப்படிச் செய்வதன் பாபம் உங்களுக்கு வரக்கூடாதென்றே பெரியவா முகத்தினைத் திருப்பிக்கொண்டு இருப்பார்னு தோணுது” என்றேன்.
அவர்கள் முகத்தில் ஏகப்பட்ட விதிர்ப்புக்கள்… “அப்படியா சாமீ? நாங்க கோவிலுக்குக் கூட போவமே? எங்களுக்கு இதெல்லாம் தெரியாதுங்க “என்றபடியாக, சில நிமிடங்கள் மௌனமாக அமர்ந்திருந்தார். பிறகு கண்களில் வழிந்த நீரை தலைப்பினால் துடைத்துக் கொண்டே என்னிடம் மீதி பணத்தைத் தரும்போது, “எனக்கு பாவம் ஏதும் வரக்கூடாதுன்னு நெனச்சவங்களைப் போயி நானும் தப்பா நெனச்சுட்டேனே… இத்தன வருஷமா இப்படி இருந்துட்டேனே… சாமீ… இன்னிக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒருத்தரு காருல வந்து பூ வாங்கிக்கிட்டு போனாங்க. அவங்க காருல முன்னாடி இவுரு படம் ஒட்டிருந்துச்சு. அத்த பாத்ததுமே எனக்குள்ள இந்த ஞாபகந்தான் வந்துச்சு சாமீ. ஆனா இன்னிக்கி பதிலு சொல்லிட்டாரூ. நாந்தாந்தப்பா நெனச்சுருக்கேன். அத்த புரிஞ்சுக்கற அளவுக்கு எனக்கு அறிவு பத்தலையே சாமீ” என கண்களில் நீர் வழிய அந்த அம்மையார் பேசியதைக் கேட்கையில் அடியேனும் மகனும் கண்களில் நீர்வழிய அதே நேரம் ஸ்ரீசரணாளின் மகிமையைக் கண்டு ஆனந்தம் அடைந்தோம். சில நிமிடங்களுக்கு முன்னராக என்னிடம் தந்த புஷ்பப்பையை எப்படி திரும்ப வாங்கிக்கொள்வது என கவலைப்பட்ட அந்த பூக்கார அம்மையார், இறுதியில் இரண்டு துளசிப் பைகளைத் தந்து அவருக்கு பூஜை செய்து தன்னையும் மன்னிக்கச் சொல்லி வேண்டிக்குங்கன்னு சொன்னது மஹா ஆனந்தத்தைத் தந்தாளும், முப்பத்தி ஒன்பது வருடங்களுக்கு அந்த அம்மையாருக்கு இதனை ஏன் புரியவைக்கவில்லை என்ற கேள்வி மனதுள் உருவாகியது; அதே நேரம் எதை எப்போ எப்படி செய்யனும்னு அந்த பரப்ரஹ்மத்திற்கு நன்றாகத் தெரியுமாச்சே; அவரை மிஞ்சி ஒரு சக்தியும் உண்டோ? அவரை விடவும் நமக்கெல்லாம் கதி வேறும் உண்டோ என்றே தோன்றுகிறது.
எது எப்படியோ !?! அந்த அம்மையார் காரணம் அறிந்து ஆனந்தமாக பக்தியோடு தந்த துளசியை ஐயனுக்குச் சார்த்தி நமஸ்கரிக்கும் பாக்கியம் பெற்றனமே என்ற ஆஸ்வாசமும் ஆனந்தமும் மனதார உணரும் மஹாபாக்கியனானோமே என்ற திருப்தியோடு……….
|| பெரியவா சரணம் ||
என அனைவருடைய சார்பிலும் நமஸ்கரிக்கின்றேன்.
குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை.
பெரியவா கடாக்ஷம்
நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்.
சாணு புத்திரன்.
No comments:
Post a Comment