கடலூர் : கடலூரில் நேற்று நடந்த மராத்தான் போட்டியில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நேற்று கடலூரில் மராத்தான் ஓட்டப் போட்டி நடந்தது. 16 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு 5 கி.மீ., தூரமும், 16 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண்களுக்கு 10 கி.மீ., தூர போட்டிகள் தனித்தனியாக நடத்தப்பட்டன. இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் 160 பேர் பங்கேற்றனர்.
கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடந்த இப்போட்டியை எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடந்த இப்போட்டியை எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அண்ணா விளையாட்டரங்கில் துவங்கி கலெக்டர் அலுவலக சாலை, பாரதி சாலை, பீச் ரோடு வழியாக தேவனாம்பட்டினம் கடற்கரைவரை சென்று, மீண்டும் பீச் ரோடு, ஜட்ஜ் பங்களா ரோடு வழியாக அண்ணா விளையாட்டரங்கை அடைந்தனர். போட்டியில் 16 வயதிற்குட்பட்ட மாணவர் பிரிவில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி மாணவர் விஸ்வநாதன், நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் துரை, சிதம்பரம் அண்ணாமலை நகர் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளி மாணவர் பிரசாந்த், மாணவிகள் பிரிவில் என்.எல்.சி., ஜவகர் பள்ளி மாணவி ஸ்ரீதேவி, கடலூர் மஞ்சக்குப்பம் வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவிகள் சந்தியா, அம்சவள்ளி ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
16 வயதிற்கு மேற்பட்டோர் ஆண்கள் பிரிவில் கடலூர் அடுத்த கோ.சத்திரம் மாயகிருஷ்ணன், விருத்தாசலம் விஜயமாநகரம் ராஜபாண்டியன், வெங்கடேசன், பெண்கள் பிரிவில் திட்டக்குடி வதிஷ்டபுரம் அன்புச் செல்வி, கடலூர் கந்தசாமி நாயுடு பெண்கள் கல்லூரி ரேவதி, கடலூர் சொரக்கல்பட்டு பிரேமா ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 3,000 ரூபாயும், 2ம் பரிசாக 2,000 ரூபாயும், மூன்றாம் பரிசாக 1,000 ரூபாயும், 4 முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு தலா 500 ரூபாய் மற்றும் சான்றிதழை கூடுதல் எஸ்.பி., ராமகிருஷ்ணன், டி.எஸ்.பி., பாண்டியன் வழங்கினர்.
No comments:
Post a Comment