Monday, February 7, 2011

Sachin -Dinamalar.

புதுடில்லி: ""நான் "பேட்' செய்ய களமிறங்கும் போதெல்லாம், இந்திய தேசமே என்னோடு சேர்ந்து வருவதாக வர்ணிப்பதுண்டு. சர்ச்சைக்குரிய போர்ட் எலிசபெத் போட்டியின் போது எனது கையில் "பேட்' இல்லை. ஆனாலும், எனது நேர்மை மீது நாட்டு மக்கள் நம்பிக்கை வைத்தனர். அதை நினைத்து நெஞ்சம் நெகிழ்ந்து போனேன். இதனை, இன்றைக்கும் என்னால் மறக்க முடியாது,'' என, சச்சின் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2001ல் இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி, போர்ட் எலிசபெத்தில் நடந்தது. இப்போட்டியின் போது இந்திய வீரர் சச்சின், பந்தில் இருந்த புற்களை சுத்தம் செய்தார். ஆனால், இவர் பந்தை சேதப்படுத்தியதாக அநியாயமாக குற்றம்சாட்டப்பட்டது. இதனை <உறுதி செய்த "மேட்ச் ரெப்ரி' மைக் டென்னஸ், சச்சினுக்கு ஒரு போட்டியில் பங்கேற்க தடை விதித்தார். இதையடுத்து இந்திய ரசிகர்கள் கொதிப்படைந்தனர். நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
இச்சம்பவம் உட்பட தனது வாழ்க்கையில் ஏற்பட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து, பத்திரிகையாளர் கவுதம் பட்டாச்சார்யா எழுதியுள்ள "சச்' என்ற புத்தகத்தில் சச்சின் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக கூறியுள்ளதாவது:
போர்ட் எலிசபெத் டெஸ்ட் போட்டியின் போது பந்தில் ஒட்டியிருந்த புற்களை தான் அகற்றினேன். ஒருபோதும் பந்தின் தையலை பிரிக்கவோ அல்லது சேதப்படுத்தவோ முயற்சிக்கவில்லை. இது பற்றிய உண்மையை மைக் டென்னசிடம் எடுத்துக் கூறினேன். ஆனால், எதையும் கேட்க அவர் தயாராக இல்லை. இறுதியில் என் மீது பந்தை சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டிய போது அதிர்ந்து போனேன்.
மக்கள் ஆதரவு:
இந்த நேரத்தில் நாட்டு மக்கள் எனது நேர்மை மீது நம்பிக்கை வைத்தனர். எனக்கு முழு ஆதரவு அளித்தனர். இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். நான் "பேட்' செய்ய களமிறங்கும் போதெல்லாம், இந்திய தேசமே என்னோடு சேர்ந்து வருவதாக வர்ணிப்பதுண்டு. போர்ட் எலிசபெத் போட்டியின் போது எனது கையில் "பேட்' இல்லை. ஆனாலும், ரசிகர்கள் முழு ஆதரவு அளித்தனர். அதை நினைத்து நெஞ்சம் நெகிழ்ந்து போனேன். இதனை இன்றைக்கும் என்னால் மறக்க முடியாது. இந்த சம்பவத்துக்கு பின் பந்தை சுத்தம் செய்யும் போது, அம்பயர் அருகில் இருக்கும்படி பார்த்துக் கொள்வேன்.
சூதாட்ட சர்ச்சை:
கடந்த காலத்தில் இந்திய கிரிக்கெட்டை சூதாட்ட சர்ச்சை உலுக்கிய போது, நான் கலங்கவில்லை. எனது கடமையில் மட்டும் கண்ணும்கருத்துமாக இருந்தேன். அந்த நேரத்தில் வருமான வரியை நேர்மையாக செலுத்தியதற்காக எனக்கு பாராட்டு சான்றிதழ் அளிக்கப்பட்டது. அது மிகுந்த நிம்மதியை தந்தது. இதனை பார்க்க எனது தந்தை இல்லையே என்ற ஏக்கம் மட்டும் மனதில் இருந்தது.
மும்பை தாக்குதல்:
மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், மிகுந்த மனவேதனை அளித்தது. அப்போது கட்டாக்கில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தோம். இரவில் தான் தாக்குதல் பற்றி தெரிய வந்தது. வீட்டில் உள்ளவர்களும் நெருக்கமானவர்களும் பாதுகாப்பாக உள்ளனரா என்பதை போன் மூலம் தெரிந்து கொண்டோம். அந்த பயங்கரத்தை தாங்கிக் கொள்வது மிகவும் கடினமாக இருந்தது. சகஜ நிலைக்கு திரும்ப நீண்ட காலம் தேவைப்பட்டது.
இவ்வாறு சச்சின் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

 https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/