கடலூர் : ஆந்திராவில் நடைபெறவுள்ள தேசிய பைக்கா போட்டியில் பங்கேற்கவுள்ள தமிழக வீரர்கள் நேற்று கடலூரில் இருந்து வழியனுப்பி வைக்கப்பட்டனர். கிராமப்புற இளைஞர்களிடம் உள்ள விளையாட்டு திறனை மேம்படுத்தும் பொருட்டு மத்திய அரசு கிராம, ஒன்றிய, மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் பைக்கா போட்டிகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டிற்கான தேசிய பைக்கா போட்டி ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் நகரில் நாளை துவங்குகிறது. இப்போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேற்கவுள்ள வீரர்கள் ஒன்றிய, மாவட்ட, மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
அதன்படி டேக்வாண்டோ, வாலிபால் மற்றும் தடகள போட்டிகளில் பங்கேற்கவுள்ள வீரர்களுக்கு கடந்த ஒரு வாரமாக கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் டேக்வாண்டோ வீரர்கள் 13 பேருக்கு சிறப்பு பயிற்சியாளர்கள் வினாயகமூர்த்தி, இளம்பருதியும், வாலிபால் அணிக்கு தேர்வு பெற்ற 24 பேருக்கு சிறப்பு பயிற்சியாளர்கள் ஆசிர்சாம், அகிலாவும், தடகள வீரர்கள் 34 பேருக்கு பயிற்சியாளர்கள் சங்கர் காத்தவராயன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். பயிற்சி முடிந்து அனைவரும் தங்களது பயிற்சியாளர்களுடன் நேற்று மதியம் 2 மணிக்கு கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் இருந்து சிறப்பு பஸ் மூலம் சென்னை புறப்பட்டு சென்றனர். அங்கிருந்து இன்று ஆந்திரா செல்கின்றனர். கடலூரில் மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் வழியனுப்பி வைத்தார்.
No comments:
Post a Comment