Sunday, April 24, 2011

சேலம்-Dina malar 24 04 11.

சேலம்: சேலம், காந்தி ஸ்டேடியத்தில் ஒதுக்கப்பட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் கிரிக்கெட் விளையாடுபவர்கள் மீது, போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை போர்டு வைக்கப்பட்டுள்ளதால், இளைஞர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். சேலம், மகாத்மா காந்தி ஸ்டேடியத்தில் சேலம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் கிரிக்கெட், டென்னிஸ், வாலிபால், ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு விளையாடுகின்றனர். விளையாட்டு பயிற்சி மேற்கொள்ளவும் பலர் வருகின்றனர். காலை, மாலை வேளைகளில் நடைபயிற்சி, உடற்பயிற்சி, யோகா மற்றும் லாபிங்தெரபி போன்றவற்றிலும் ஈடுபடுகின்றனர். சனி, ஞாயிறு விடுமுறை, பண்டிகை நாட்கள் மற்றும் கோடை விடுமுறை நாட்களிலும் காந்தி ஸ்டேடியத்தில், கிரிக்கெட் விளையாட ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் வருவதால், ஸ்டேடியமே நிரம்பி காணப்படும். தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், தினமும் 20க்கும் மேற்பட்ட குழுக்கள், ஸ்டேடியம் முழுவதையும் ஆக்கிரமித்து கிரிக்கெட் விளையாடுகின்றனர். அவர்கள், காலை 7 மணிக்கே வந்து, மாலை 6 வரையிலும், சில சமயம் இரவு 7 மணி வரையிலும் விளையாடுகின்றனர். மைதானத்தில் உள்ள டிராக்கை ஆக்கிரமித்து, ஸ்டம்புகளை நட்டு, ஸ்டம்பிற்கு பதிலாக கற்களை வைத்தும் விளையாடுகின்றனர். இதனால், நடைபயிற்சி, உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சிக்கு வருபவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. நடைபயிற்சி மேற்கொள்பவர் மேல் கிரிக்கெட் பந்து விழுவதும், இதுபற்றி கேட்பவர்களிடம் வாக்குவாதம் செய்வதும், இளைஞர்களுக்கு வாடிக்கையாகி உள்ளது. இந்நிலையில், கிரிக்கெட் விளையாட வருபவர்களை எச்சரிக்கும் விதமாக, விளையாட்டு அலுவலர் பெயரில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதில், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே கிரிக்கெட் விளையாட வேண்டும். விளையாட்டு போட்டிகள் நடைபெறும் நாட்களில், கிரிக்கெட் விளையாட அனுமதி கிடையாது. கிரிக்கெட் விளையாடுபவர்கள் மைதானத்தின் மைய பகுதியில் மட்டும் விளையாட வேண்டும். மேலும், வாகனம் நிறுத்த ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டும், வாகனத்தை நிறுத்த வேண்டும். இந்த அறிவிப்பை மீறுபவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும், என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் அறிவிப்பால், கிரிக்கெட் விளையாட வருபவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுபற்றி மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரதாப்குமார் கூறியதாவது: கிரிக்கெட் விளையாட வருபவர்கள், மைதானம் முழுவதையும் ஆக்கிரமிப்பதுடன், டிராக், டென்னிஸ் கோர்ட், கூடைபந்து கோர்ட், லாபியின் மேற்கூரை ஆகியவற்றை சேதப்படுத்துகின்றனர். அதனால், மற்ற பயிற்சிக்கு வருபவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. பலமுறை அவர்களிடம் எடுத்துக்கூறியும் கண்டுகொள்ளவில்லை. அதனால், எச்சரிக்கை போர்டு வைக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

 https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/