Wednesday, November 3, 2010

சிவகாசி : செஸ் கிராண்ட் மாஸ்டராக வேண்டும் என்பதே சிவகாசி

சிவகாசி :  செஸ் கிராண்ட் மாஸ்டராக வேண்டும் என்பதே சிவகாசி பழக்கடை வியாபாரி பால்சாமியின் மகன் மகேஸ்வரன்(23)னின் நீண்ட நாள் ஆசை. இவர் 6ம் வகுப்பு படித்தபோது செஸ் விளையாட்டை வேடிக்கை பார்க்க போய், பின்னர் அதுவே ஆசையாகி விட, காய்களை நகர்த்த கற்றுக் கொண்டார்.

எதிராளியின் ராணியையும், ராஜாவையும் வெட்டுவதில் கை தேர்ந்தார்.  1996ல் மாவட்டஅளவிலான 14 வயதினருக்கான போட்டியில் முதலிடம் பெற்றார். கரூரில் 15 வயதுக்கு உட்பட்டோர் போட்டியில் நான்காமிடம், மும்பையில் நடந்த தேசிய போட்டியில் 21வது இடம் பெற்றார்.  சிவகாசி காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் 1999ல் நடத்திய ரேட்டிங் போட்டியில் 19 வயது பிரிவில், அப்போதைய உலக சாம்பியன் பூபேஸ் ஆனந்த் உடன் விளையாடி வென்றார்.

சென்னையை சேர்ந்த உலக சாம்பியன் ஆர்த்தி ராமசாமியை கடைசி சுற்றில் சமன் செய்தார். இவர் ஏழாம் வகுப்பு படிப்பதற்குள்ளே உலக சாம்பியன்களுடன் விளையாடிய சாதனை அனைவரையும் வியக்க வைத்தது. ஒரே விளையாட்டில் ஒன்பது வீரர்களை சந்தித்து மூன்று புள்ளிகள் பெற்றால் ரேங்கிங் கிடைக்கும். இவர் ரேங்கிங் பெற எட்டு பேருடன் விளையாடினார். ஒருவருடன் விளையாட வாய்ப்பு இல்லை. பின் கேரளாவில் நடந்த ஓபன் செஸ் போட்டியில் ஒருவரை வென்று உலக தரவரிசையில் எட்டாமிடம் பெற்றார்.

இவரின் விளையாட்டு திறனை பாராட்டி, சிவகாசி காளீஸ்வரி கல்லூரி கல்விக்கான செலவுகளை ஏற்றது. பி.எஸ்சி., (ஐ.டி.) படித்தார். 2004- 2007 வரை மதுரை காமராஜ் பல்கலை செஸ் சாம்பியனாக வலம் வந்தார். "ஸ்போர்ட்ஸ் கோட்டா'வில் வேலூர் வி.ஐ.டி., கல்லூரியில் எம்.சி.ஏ., படித்தார். அங்கிருந்து அகில இந்திய பல்கலைகளுக்கு இடையே கான்பூர், பீகாரில் நடந்த போட்டிகளில், சென்னை பல்கலை அணியில் விளையாடி முதலிடம் பெற்றார். படிக்கும் போதே தெற்கு ரயில்வேயில் வேலை தேடி வந்தது. படிப்பை முடிக்க வேண்டும் என்பதால் வேலையில் சேரவில்லை.  மும்பையில் நடந்த நேஷனல் "ஏ' லெவல் போட்டியில் மகாராஷ்டிராவை சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான பிரவீன் திபேயை சமன் செய்தார். பின்னர் "பிடே' (பெடரேசன் இன்டர்நேஷனல் டிச்சஸ்) அமைப்பின் தரம் பெற்றார்.

ஐந்து முறை அகில இந்திய போட்டியில் பங்கேற்று இரு முறை முதலிடமும், ஒருமுறை இரண்டாமிடமும் பெற்றார். 2009ல் இலங்கையில் நடந்த ஓபன் செஸ் போட்டியில் உலக அளவில் 15வது இடம் பெற்றார். தமிழக அளவில் ஓபன் செஸ் போட்டியில் மூன்றாவது இடத்திலும், அகில இந்திய போட்டியில் விளையாடி 24வது இடத்திலும் உள்ளார். இந்தாண்டு, டில்லி குர்கானில் நடந்த அகில இந்திய போட்டியில் தமிழக செஸ் அணி கேப்டனாக சென்று 11வது இடத்தை பெற்றார். 

இவர் கூறியதாவது: செஸ் விளையாடும் மாணவர்கள் புத்தி கூர்மையுள்ளவர்களாக இருப்பர். கணிதத்தை எளிதாக செய்வர். தினமும் பயிற்சி செய்கிறேன். ஆன் லைனில் இதற்கு பலரின் சாதனை அறிந்து கம்ப்யூட்ட ரில் விளையாடி பயிற்சி பெறுகிறேன். என் வளர்ச்சிக்கு ராஜன், சென்னை ஹரிஹரன் ஆகியோர் பயிற்சி அளிக்கின்றனர். விஸ்வநாதன் ஆனந்த் போல கிராண்ட் மாஸ்டர் ஆக வேண்டும் என்பதே என் லட்சியம், என்றார்.

No comments:

Post a Comment

 https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/