Friday, November 9, 2012

கடலூர் டெங்கு கொசுப் புழு ஒழிப்பு





கடலூர்: கடலூரில் உள்ள மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் டெங்கு கொசுப் புழு ஒழிப்பு சிறப்பு பணி நடந்தது. மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ராஜா தலைமை தாங்கினார். சுகாதாரப் பணிகள் நிர்வாக இயக்குனர் முருகதாஸ், கண்காணிப்பாளர்கள் சண்முகானந்தன், அப்துல் அஜீம் மற்றும் ஊழியர்கள், துணை இயக்குனர் அலுவலக வளாகம் முழுவதும் தூய்மை செய்தனர். தொடர்ந்து, கொசு புழு வளர்வதற்கு ஏதுவாக இருந்த ஓடுகள், கப்புகள், பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றப்பட்டு, மருந்து தெளிக்கப்பட்டது. 




விழிப்புணர்வு பிரசுரம் வழங்கல்

கடலூர்: கடலூரில், எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், கிராம வள மையம் சார்பில் டெங்கு நோய் குறித்த விழிப்புணர்வு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ராஜேந்திர ரத்னு முன்னிலை வகித்தார். ஆராய்ச்சி நிறுவன திட்ட அலுவலர் இளங்கோவன், டெங்கு நோய் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வெளியிட சுகாதாரத் துறை துணை இயக்குனர் ஜவகர் பெற்றுக் கொண்டார். டெங்கு நோயின் அறிகுறிகள், இந்நோய் வராமல் பாதுகாக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. 


 கடலூர் நகராட்சியில் சேர்மன் தலைமையில் துப்புரவு பணி


கடலூர்: கடலூர் நகராட்சி அலுவலகத்தில் நேற்று காலை 11 மணி முதல் 12 மணி வரை ஒட்டு மொத்த துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் நேற்று காலை 11 மணி முதல் 12 மணி வரை மாவட்டம் முழுவதும், டெங்கு காய்ச்சலை ஒழிப்பதற்காக, ஒரே நேரத்தில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் துப்புரவு பணி மேற்கொள்ளப்படும் என கலெக்டர் அறிவித்திருந்தார். அதன்படி நேற்று கடலூர் நகராட்சி அலுவலகத்தில் சேர்மன் சுப்ரமணியன் தலைமையில், கமிஷனர் (பொறுப்பு) ரவி, கவுன்சிலர்கள், சுகாதார பணியாளர்கள், ஆய்வாளர்கள், துப்புரவு பணியாளர்கள், ஊழியர்கள் என அனைவரும் சேர்ந்து, நகராட்சி வளா கத்தில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்தனர். மேலும் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள், தண்ணீர் தேங்கும் பொருட்களை அப்புறப்படுத்தினர். 


டெங்கு ஒழிப்பது குறித்து வீடு, வீடாக பிரசாரம்


கிள்ளை: கிள்ளை அருகே டெங்கு காய்ச்சலை ஒழிப்பது குறித்து ஊராட்சி சார்பில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் வீடு, வீடாகச் சென்று பிரசாரம் செய்தனர். கிள்ளை அடுத்த தில்லைவிடங்கன் கிராமத்தில் டெங்கு காய்ச்சலை ஒழிப்பது குறித்து ஊராட்சி சார்பில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்றும், முக்கிய இடங்களில் பிரசாரம் செய்தனர். பிரசாரத்தை ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் துவக்கி வைத்தார். ஊராட்சி துணைத்தலைவர் அஷ்ரப் அலி, பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி, ஆசிரியர்கள் அருண்உதயா, உஷா, டெல்பின் சாந்தி உள்பட பலர் கலந்து 
கொண்டனர்.



 கொசு ஒழிப்பு "மாஸ் கிளீனிங்' அரசு அலுவலகங்கள் "பளீச்'

சிதம்பரம்: டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுவை ஒழிக்க "மாஸ் கிளீனிங்' முன் மாதிரி திட்டம் சிதம்பரத்தில் நேற்று கடைபிடிக்கப்பட்டது. டெங்கு காய்ச்சல் நோயை பரப்பும் கொசுவை ஒழிக்க அரசு மற்றும் தனியார் கட்டடங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை அப்புறப்படுத்தும் வகையில் ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை பகல் 11 மணி முதல் 12 மணி வரை ஒரே நாளில் ஒரே நேரத்தில் தேங்கியுள்ள மழை நீரை ஒட்டு மொத்தமாக அகற்றும் "மாஸ் கிளீனிங்' முன் மாதிரி திட்டத்தை சிதம்பரம் நகராட்சி மற்றும் அண்ணாமலை நகர் பேரூராட்சி உள்ளிட்ட பல இடங்களில் துவக்கியது. இதன் தொடர்ச்சியாக டெங்கு கொசு ஒழிப்பு "மாஸ் கிளீனிங்' முன் மாதிரி திட்டம் நேற்று சிதம்பரம் பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டது. சிதம்பரம் தாலுகா அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகம், சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் பள்ளிகளில் 11 மணி முதல் ஒரு மணி நேரம் தங்கள் அலுவலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிளில் தேங்கி உள்ள தண்ணீரை அப்புறப்படுத்தினர். மேலும் பிளாஸ்டிக் கப், பைகள், பேப்பர்கள் போன்றவைகளை அப்புறப்படுத்தி சுத்தம் செய்தனர். இதனால் அரசு அலுவலகங்கள், சுற்றுப்புறங்கள் மற்றும் அலுவலகம் உட்புறங்கள் "பளீச்' என சுத்தமாக காணப்பட்டது. அலுவலகங்களுக்கு வந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். 


ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்.எல்.ஏ., அதிரடி சோதனை


ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காட்டுமன்னார்கோவில், எம்.எல்.ஏ., திடீர் சோதனை மேற்கொண்டார். ஸ்ரீமுஷ்ணத்திற்கு நேற்று காலை காட்டுமன்னார்கோவில் தொகுதி எம்.எல். ஏ., முருகுமாறன் வருகைதந்தார். தொடர்ந்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்று திடீர் சோதனை மேற்கொண்டார். அங்கு, பணியில் இருந்த டாக்டர்களிடம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள், சுகாதார நிலையத்திற்குத் தேவைப்படும் வசதிகள் குறித்தும் கேட்டார். அப்போது சுகாதார நிலையத்திற்கு அரசு மகப்பேறு மருத்துவர் ஒருவரை நியமிக்க வேண்டும். புற நோயாளிகள் தங்குவதற்கு அறை , சித்த மருத்துவ பிரிவிற்கு கட்டடம். ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்த ஷெட் மற்றும் டெங்கு நோய்க்கு பரிசோதனை செய்யும் கருவி ஆகியவை தேவைப்படுவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ., உறுதியளித்தார். பின்னர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இயங்கி வரும் சிறப்பு குழந்தைகள் பராமரிப்பு மையத்திற்குச் சென்று குழந்தைகளிடம் நலம் விசாரித்தார். பேரூராட்சி சேர்மன் ஆதிலட்சுமி கலியமூர்த்தி, காட்டுமன்னார்கோவில் சேர்மன் மணிகண்டன், மாவட்ட அவைத் தலைவர் கலியமூர்த்தி, நகர செயலர் பூமாலை கேசவன், முன்னாள் மாவட்ட கழகச் செயலர் செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

 https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/