Monday, January 6, 2014

திருவிடைமருதூர் - தைப்பூச ஜட பாராயணம்



திருவிடைமருதூர் - தைப்பூச ஜட பாராயணம்

கீழைத்தஞ்சாவூர் ஜில்லா நாகப்பட்டினத்தருகில் உள்ள காரப்பிடாகை என்னும் கிராமத்தில் பிறந்தவர் பாலகிருஷ்ண ஐயர். அவர் திருவிடைமருதூர் மஹாதான தெருவில் ஒரு மளிகை கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். 1949 ஆம் வருஷம் முழுவதும் (அநேகமாக) காஞ்சி ஸ்ரீ மஹா ஸ்வாமிகள் திருவிடைமருதூரில் தங்கி இருந்தார்கள். அப்போது சிறு பையனாக இருந்த அவர் புதல்வர் ஸ்ரீ ரமணி, தீவிர ஆச்சாரிய பக்தராய் இருந்த தன் தந்தையுடன் ஸ்ரீ ஸ்வாமிகளை பல தினங்கள் தரிசித்து வந்தார்.

ஒரு நாள், ஸ்ரீ ஸ்வாமிகள் பாலகிருஷ்ண ஐயரிடம் 'கடைகளை ஞாயிற்று கிழமைகளில் வியாபாரிகள் மூடி விடுகிறார்களே? அன்று, அவசரமாக பொருள்களை வாங்க வேண்டியவர்கள் என்ன செய்வார்கள்? நீ உன் கடையை வியாழ கிழமைகளில் மூடி விட்டு, ஞாயிற்று கிழமைகளில் திறந்து வையேன்' என்று கூறினாராம். ஸ்ரீ பாலகிருஷ்ண ஐயர் அப்படியே செய்தார். பிறகு ஸ்ரீ பாலகிருஷ்ண ஐயர் அவர்களும் குடும்பத்தினரும் ஸ்ரீ ஸ்வாமிகளை தர்சித்து வந்தனம் செய்யும்போதெல்லாம் பெரியவாள் 'குருவாரம்' என்பார்.

ஸ்ரீ ரமணி பள்ளியில் படித்து, கல்லூரியில் பி.காம் பரிட்சையில் வெற்றி அடைந்த பின் டாட்டா நகரில் சில ஆண்டுகள் உத்தியோகம் இருந்து வந்தார். தமிழ் நாட்டில் வேலை கிடைத்தால் பெற்றோருடன் இருக்கலாம் என்ற எண்ணத்தில் ஒரு சமயம் மனக்கலக்கம் அடைந்த ரமணி 1969-70 இல் ஒரு நாள் காலையில் சின்ன காஞ்சிபுரத்தில் தங்கியிருந்த ஸ்ரீ மஹா ஸ்வாமிகளை தர்சித்து வந்தனம் செய்த போது காலை மணி சுமார் 7.30 இருக்கும். ஸ்ரீ பெரியவாள் ஜபம் செய்ய ஆரம்பிக்கும் சமயம், அணுக்க தொண்டர்கள் கூட அவர்களின் அருகில் செல்லக்கூடாது என்பது தெரியாது வந்தனம் செய்து எழுந்தபின் ஸ்ரீ பெரியவாள் அருகில் ரமணியை உட்காரும்படி சைகை செய்தார்கள். தர்சனத்திற்கு வந்திருந்த பக்தர்களை அருகில் செல்ல வேண்டாம் என எச்சரித்தனர். ரமணியும் மூன்று முறை எச்சரித்தனர். ரமணி எழுந்து செல்ல எத்தனித்த பொழுது (இவை யாவும் ஜபம் ஆரம்பிக்கும் சில நிமிடங்கள் முன் நிகழ்ந்தவை) பெரியவாள் அவரை எழுந்து செல்ல வேண்டாம் என்பது போல் சைகை செய்தார்கள்.

ரமணி ஒளிவீசும் அவர் திருமுகத்தை பார்த்தபடி இருந்தார். அவர் கண்களில் நீர்த்துளிகள் வழிந்து கொண்டு இருந்தன. ஒரு மணியானது. ஜபம் முடிந்தது. ரமணி மறுபடியும் வந்தனம் செய்து 'பெரியவா அனுகிரகம் எப்பவும் இருக்க வேணும்' என்று பிரார்த்தித்தார். அன்று அவர்கள் புன்முறுவலுடன் ஆசீர்வதித்ததாலும் பெற்ற தர்சனத்தின் பயனாலும் சிறிது காலத்துக்கு பின் சென்னையில் பாண்ட்ஸ் கம்பெனி நிறுவனத்தில் நல்ல உத்தியோகம் பெற்று பல ஆண்டுகள் பணியாற்றி வந்தார்.

பின்னர் ஸ்ரீ மஹா ஸ்வாமிகள் காஞ்சியிலோ, தமிழ் நாட்டின் மற்ற இடங்களிலோ முகாமிட்டு இருக்கும்போது ஆங்காங்கு சென்று ரமணி ஸ்ரீ ஸ்வாமிகளை தர்சித்து வருவார். 1984 ஆம் ஆண்டு முதல் 1994 வரை காஞ்சியில் மாதமிரு முறைகளேனும் ஸ்ரீ மஹா பெரியவாளை இவர் தர்சிக்க தவறியதே இல்லை. ஸ்ரீ ஆச்சார்யாளின் விருப்பப்படி ஏற்பட்ட கங்கை கொண்ட சோழ புரத்தில் ஸ்வாமிக்கு பிரதியாண்டு அன்னாபிஷேகம், ஸ்ரீ மடத்தில் வருடாவருடம் நடைபெறும் வியாச பூஜை, குரு ஸ்வாமிகளின் ஆராதனை சமயங்களில் தன்னால் ஆன கைங்கர்யங்களில் ஈடுபட்டுக்கொண்டு திரு. ரமணி அடிக்கடி காஞ்சிபுரம் அடைந்து ஸ்ரீ மஹா ஸ்வாமிகளின் பிருந்தாவன தர்சனமும், இரு ஆச்சார்ய ஸ்வாமிகளின் தர்சனமும் செய்து வருவார்.

நன்றி - ஜகத்குரு மஹா சுவாமிகள் என்ற புத்தகத்தில் இருந்து.

இவ்வடிமையை ஸ்ரீ ரமணி மாமா அவர்களிடம் அந்த எல்லாம் வல்ல பரம்பொருள் அத்வைத பெருங்கடல் ஐயன் இணைத்த லீலை, ஸ்ரீ ரமணி மாமா அவர்கள் செய்யும் இன்னொரு மாபெரும் தொண்டு...

ஸ்ரீ ரமணி மாமா - திருவிடைமருதூரில் ஜட பாராயணம் ஒவ்வொரு தைப்பூசம் முன்னிட்டும் நடத்தி வருபவர், மற்ற பல நல் உள்ளங்களோடு சேர்ந்து.

அது ஒரு கதை.

ஒரு நாள் வழக்கம் போல் ஐயனை தரிசிக்க ஸ்ரீ மடம் சென்று இருந்தார் ஸ்ரீ ரமணி மாமா, வெகு வருடங்கள் முன். பெரியவாள் அப்போது ஸ்ரீ சந்திர சேகர கனபாடிகள் மாமா அவர்களை அழைத்து 'நீங்கள் இனி வருடா வருடம் திருவிடை மருதூரில் தை பூசத்துக்கு ஜட பாராயணம் பண்ணுங்கள்' என்றார். ஸ்ரீ கனபாடிகள் மாமா அவர்களும் அப்படியே செய்வதாக சொல்லி இருக்கிறார். அந்த சமயம் பார்த்து ஸ்ரீ ரமணி மாமா நமஸ்காரம் செய்தவுடனே, 'இவனை கூட வெச்சுக்கோங்கோ, உதவி பண்ணுவான்' என்று சொல்லி இருக்கிறார். 'எனக்கு ஒண்ணும் தெரியாதே' என்று சொன்னதற்கு ஐயன் 'ஒனக்கு ஒண்ணும் தெரியவேண்டாம், நீ கூட மாட ஒத்தாசைக்கு இருந்தா போறும்' என்று சொல்லிவிட்டார். அன்றே கலைமகள் ஸ்ரீ நாராயணஸ்வாமி ஐயர் மாமா அவர்களும் தரிசனத்துக்கு வரவே அவரிடம் ஐயன் 'திருவிடைமருதூர் ல இந்த வர்ஷத்திலே இருந்து ஜட பாராயணம் பண்ண சொல்லி இருக்கேன். இவர் வேத வித்துகளுக்கு ஏற்பாடு பண்ணிடுவார். இவன் கூட மாட ஒத்தாசையா இருப்பான், நீங்க இந்த சம்பாவனை எல்லாம் பாத்துக்கோங்கோ' என்று சொன்னவுடன், அப்படியே செய்வதாக அவரும் வாக்கு தந்துள்ளார். இன்றும் அந்த ஏற்பாடு தொடர்கிறது, ஐயன் கருணையால். இத்தனை வருடம் அங்கு ஸ்ரீ ப்ரேமி அண்ணா ஆத்தில்(என்று தான் ஞாபகம்) தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும். தைப்பூசம் அன்று பூர்த்தி ஆகும். நான்கு வேத விற்பன்னர்கள் அமர்ந்துகொண்டு வரிசையாக ஜடபாராயணம் பண்ணுவார்கள். பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

இதோ, இந்த வருடமும் 2013 ஜனவரி 15 இல் இருந்து 2013 ஜனவரி 27 வரை நெம்பர் 121, மஹா தான வீதி, திருவிடை மருதூர் என்ற முகவரியில் திருவிடை மருதூர் தை பூச ஜட பாராயண டிரஸ்ட் சார்பில் நடைபெறுகிறது.

திசம்பர் 2012 இல் பக்த அன்பர்களுடன் பகிர்ந்தது. இந்த வருடமும் தைப்பூசம் 2014 சனவரி 16, வியாழன் அன்று வருகிறது. ஏற்கனவே வேத பாராயணம் தொடங்கி நடைபெற்று வருகிறது மிக நல்ல முறையில்.



https://www.facebook.com/karthi.nagaratnam/posts/10201112850855515


No comments:

Post a Comment

 https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/